ஆப்கனில் குர்ஆனை எரித்தது தொடர்பாக போராட்டம்: அமெரிக்க கொமாண்டர் மன்னிப்பு

இஸ்லாமிய சமயத்தினரின் புனித நூலான குர்ஆனின் பிரதிகள் ஆப்கானிஸ்தானில் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அங்குள்ள அமெரிக்க கமாண்டர் ஒருவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே பக்ராம் என்ற இடத்தில் அமெரிக்காவின் விமானப் படைத்தளம் உள்ளது.

இப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் புத்தகங்கள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. ஆப்கானிஸ்தான், முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடு என்பதால் இந்த விடயம் காட்டுத் தீ போல பரவி, போராட்டங்கள் வெடித்தன.

சுமார் 2 ஆயிரம் பேர் பக்ராம் விமானப் படைத்தளம் முன்பு திரண்டு, அங்கு அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் விமானப் படைத்தளம் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்கினார்கள்.

இதனால் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இருப்பினும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

பின்னர், ராணுவ அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தினர். இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ கொமாண்டர் ஜெனரல் ஜான் ஆலென் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும் அமெரிக்க ராணுவ மந்திரி லியானஸ் பெனேட்டாவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பக்ராம் மாகாண கவுன்சில் தலைவர் அகமது ஷகி ஷகத் கூறும்போது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் விட்டுச் சென்ற பொருட்களை அமெரிக்க ராணுவ வீரர்கள் எரித்துள்ளனர்.

அதில், குர்ஆன் புத்தகங்களும் இருந்துள்ளன. எத்தனை புத்தகங்கள் எரிக்கப்பட்டன என்று தெரியவில்லை. பல புத்தகங்கள் பாதி எரிந்த நிலையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.